பணியில் இருந்தபோதே தந்தை இறந்த காரணத்தினால் கருணை அடிப்படையில் வேலை பெற்ற தாசில்தார் ஒருவர் 100 ஏக்கர் நிலம், 700 கிராம் தங்கம், சொகுசுகார்கள், 60 கைகடிகாரம், கட்டுக்கட்டாகப் பணத்துடன் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் சிக்கிய தகவல் பலரையும் மலைக்க வைத்திருக்கிறது.
லஞ்சம் பெறுவதைத் தடுக்கும் வகையில் கர்நாடக மாநிலத்தில் தற்போது லோக் ஆயுதா லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அங்குள்ள அரசு அதிகாரிகளின் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் கடுமையான சோதனையை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது 62 அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான 15 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் பெங்களூரு கே.ஆர்.புரா பகுதியின் தாசில்தார் அஜித் குமார் என்பவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சோதனையை நடத்திய போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதாகவும் ஒட்டுமொத்தமாக அவற்றின் மதிப்பு ரூ.1000 கோடியைத் தாண்டும் என்றும் கூறப்படுகிறது.
தஷின கனடா மாவட்டத்தின் புட்டூர் பகுதியில் வேலைப்பார்த்து வந்த ஆனந்த்ராய் என்பவர் தாசில்தார் பதவியில் இருந்தபோது தனது 51 வயதில் உயிரிழந்துள்ளார். இதையடுத்து கருணை அடிப்படையில் அவருடைய மகன் அஜித் குமார் தாசில்தாராக பணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். தற்போது கே.ஆர்.புரா பகுதியில் இவர் வேலைப்பார்த்து வரும் நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையல் அஜித் குமாருக்குச் சொந்தமான கொடிகேஹள்ளி வீடு, சந்திரா லே அவுட் அடுக்குமாடி குடியிருப்பு என 12 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. அதில் ரூ.40 லட்சம் ரொக்கம், 700 கி தங்கம், சொகுசு வாகனங்கள், 65 கை கடிகாரம் மேலும் தொட்டபள்ளாப்புராவில் 100 ஏக்கர் நிலம் வாங்கியதற்கான ஆவணம் எனப் பலவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதில் 100 ஏக்கர் நிலத்தின் மதிப்பு ரூ.300 கோடி இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டு இருக்கிறது.
இதைத்விர கல்லூரு கிராமத்தில் 30 ஏக்கர், தேவனஹள்ளியில் 18 ஏக்கர் பண்ணை வீடு என்று தன்னுடைய மனைவி, உறவினர்கள் பெயரிலும் பினாமி பெயரிலும் சொத்துகளை வாங்கி குவித்து வைத்திருக்கிறார். இதற்குமுன்பு முறைகேடாக செயல்பட்டார் என்று கூறி கடந்த 2022 இல் சஸ்பெண்ட்டும் செய்யப்பட்டுள்ளார். ஆனால் பணிக்கு மீண்டும் திரும்பிய இவருடைய சொத்துமதிப்பு தற்போது ரூ.1000 கோடியைத் தாண்டும் என அதிகாரிகளின் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அஜித் குமாரை கைது செய்துள்ள லோக் ஆயுதா லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அவரிடம் கடுமையான விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.