அரிஸோனாவில் ஒரு கொலையாளிக்கு தீர்ப்பு வழங்கப்படும் முன், கொலை செய்யப் பட்டவர் அவருடன் ஆர்ட்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் மூலம் பேசுவது போல நீதிமன்றத்தில் காட்டப் பட்ட விடியோ ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்பம் இவ்வாறு பயன்படுத்தப் படுவது இதுவே முதல்முறை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
2021, நவம்பர் 13 அன்று, 37 வயதான கிறிஸ்டோஃபர் பெல்கி என்பவரை சுட்டுக் கொன்ற 54 வயதான ஹார்காஸிட்டஸ் என்பவருக்கு, மே ஒன்றாம் தேதி, மரிகோப்பா மாவட்டத் தலைமை நீதிபதி டாட் லாங் அதிகப் பட்ச சிறை தண்டனை அளித்து தீர்ப்பு கூறினார்.
அப்போது, பெல்கியின் சகோதரி, நீதிபதியின் அனுமதியுடன் கொலை செய்யப் பட்ட பெல்கியின் முகம், உருவம், குரல் இவற்றை பயன்படுத்தி ஏஐ மூலமாக உருவாக்கப் பட்ட விடியோவில், பெல்கியே நீதிபதியிடம் குற்றவாளி யின் தண்டனையைக் குறைக்கச் சொல்வது போல உருவாக்கிய விடியோவை நீதிமன்றத்தில் ஓட விட்டார்.
“ என்னை சுட்டு வீழ்த்திய ஹார்காஸிட்டஸ் அவர்களே! நான் மன்னிப்பை நம்புகிறேன். இன்னொரு பிறவியில் நாம் நண்பர்களாக சந்திப்போம்” என்று பெல்கியின் செயற்கை உருவம் பேசிய போது நீதிமன்றம் கலங்கியது.
இவ்வாறு பெல்கியின் செயற்கை உருவத்தைப் பேச வைப்பது, முழுக்க முழுக்க அவரது குடும்பத்தினரின் விருப்பமேயன்றி, நீதிமன்றத்திற்கு இதில் பங்கில்லை என நீதிமன்ற அலுவலர் கூறினார்.
ஆர்ட்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் பிரிவில் பணிபுரியும் பெல்கியின் சகோதரி, ஸ்டேஸி வேல்ஸும், அவரது கணவரும் இதை மிகுந்த ஆலோசனைக்குப் பின்னரே உருவாக்கியதாக தெரிகிறது.
2023 ஆம் ஆண்டு வரை தான் இது குறித்து யோசிக்கவில்லை என்று கூறிய வேல்ஸ், ‘ பாதிக்கப்பட்டவர்களுக்கான தாக்க அறிக்கையை உருவாக்க இரண்டு வருடங்கள் முயற்சித்த பிறகு, தனது மறைந்த சகோதரரின் குரல் பெரும் தாக்கத்தை உருவாக்கும்’ என்று அவருக்குத் தோன்றியதாக அவர் கூறினார்.
அரிசோனா மாநில பல்கலைக்கழக சட்டப் பேராசிரியர் கேரி மார்ச்சண்ட், நெறிமுறைகள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் நிபுணத்துவம் பெற்றவர். அவர் இது பற்றி கூறுகையில், பெல்கியின் உறவினர்கள், தங்கள் சகோதரனைக் கொன்றவருக்கு தண்டனையைக் குறைக்கும் படி கேட்கும் ஒரு சுயநலமற்ற படைப்பை உருவாக்கியதற்காக அவர்களை மனமாரப் பாராட்டினாலும், அது ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றி அவர் கவலைப் படுவதாகக் கூறினார்.
“….என்ன சொல்கிறேன் என்றால், பாருங்கள், அதில் ஒருவர் பேசுகிறார், ஆனால், அவர் உண்மையில் பேசவில்லை. இல்லையா? நீதிமன்றத்தில் அவர் பேசுகிறார். ஆனால், நிஜவாழ்க்கையில் அவர் உயிருடன் இல்லை. அந்த பேச்சோ, எண்ணங்களோ, அவருடையது இல்லை. நீதித் துறையைப் பொறுத்தவரை, இது நம்மை ஆபத்தான களங்களில் கொண்டு நிறுத்தும் அசுரத் தாவலோ என்று எனக்குத் தோன்றுகிறது” என்றார்.