பெரு நாட்டில் ஒரு பழைய கல்லறையில் கிடைத்த மனித உடலின் மிச்சங்கள் அது ஒரு உயர்குடி பெண்ணின் கல்லறையாக இருக்கலாம் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களை எண்ண வைத்திருக்கிறது.
பெரு நாட்டின் கடலோரப் பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 5,000 ஆண்டுகள் பழமையான ஒரு பெண்ணின் சடல மிச்சங்களைக் கண்டுபிடித்துள்ளனர். அந்த பெண், பழங்கால கரால் நாகரிகத்தைச் சேர்ந்த உயர்குடி பெண்ணாக இருக்கலாம் என்றும், 5000 ஆண்டுகளுக்கு முன்னர், அங்கு பெண்களுக்கு இருந்த முக்கியத்துவத்தை இது காட்டுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
லிமா என்ற இடத்திலிருந்து பசிபிக் கடற்கரையில் சுமார் 180 கிமீ (112 மைல்) தொலைவில் அமைந்துள்ள கரால், அமெரிக்காவின் பழமையான நகரமாகக் கருதப்படுகிறது. பண்டைய எகிப்திய, சீன மற்றும் சுமேரிய நாகரிகங்கள் இருந்த அதே காலகட்டத்தில் வளர்ந்த இந்த நாகரிகம், மற்ற நாகரிகங்களின் தாக்கம் இல்லாமல், முழுமையான தனிமையில் செழித்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
கல்லறை கண்டுபிடிக்கப்பட்ட கரால் தளத்தில் உள்ள ஆஸ்பெரோ பகுதி முன்பு நகராட்சி குப்பைமேடாக பயன்படுத்தப்பட்டது.
"இது ஒரு முக்கியமான சவ அடக்கம் என்றே தோன்றுகிறது. ஏனெனில், இங்கு உயர்குடி பெண்களுக்குச் செலுத்தப்படும் மரியாதை மிக்க சில அம்சங்களைப் பார்க்கமுடிகிறது” என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர் டேவிட் பலோமினோ கூறினார். சடலம் மூடப்பட்ட விதத் தையும் தோல், முடி மற்றும் நகங்கள் பாதுகாக்கப் பட்ட விதத்தையும் அவர் சுட்டிக் காட்டினார்.
இறந்த பெண்ணுக்கு சுமார் 20 முதல் 35 வயது இருக்கலாம். பெண்ணின் உடல், அமேசானிய பறவையான மாக்கா பறவையின் இறகுகளால் ஆன நீல மற்றும் பழுப்பு நிற இறகுப் போர்வையில் சுற்றப் பட்டிருந்தது. கல்லறையில் காணிக்கைகள், மட்பாண்டங்கள், சுரைக் குடுவைகள் மற்றும் ஒரு டொக்கன் பறவையின் அலகு ஆகியவை வைக்கப்பட்ட கூடைகளும் இருந்தன.
இந்த கண்டுபிடிப்பு "இந்நாகரிகத்தில் ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் பெரும்பங்கு இருப்பதைக் காட்டுகிறது” என்று பலோமினோ கூறினார்.
ஆராய்ச்சியாளர்கள் உடல் அடக்கம் செய்யப் பட்ட தேதியை கணிக்கமுடியாது என்றாலும், கரால் நாகரிகம் கி.மு 3,000 வைச் சேர்ந்தது என்று தெரிவித்தனர்.