பாங்காக், மார்ச் 29 – தாய்லாந்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நிலநடுக்கத்தால் உண்டான குழப்பங்கள் மற்றும் மரண ஓலங்களுக்கு மத்தியில், மருத்துவமனை ஒன்றில் அங்கும் இங்கும் ஆடிக் கொண்டிருந்த படுக்கையில், ஒரு பெண் குழந்தை பிறந்தது.
மியான்மரில் மார்ச் 28- வெள்ளிக்கிழமை அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாய்லாந்தின் தலைநகரான பாங்காக் வரை கட்டிடங்களை உலுக்கியது. இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகள் தரை தளத்திற்கும் வெளிப்புற கட்டிடங்களுக்கும் பாதுகாப்பிற்காக வெளியேற்றப்பட்டனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்றிருந்த நிறைமாத கர்ப்பிணியான 36 வயதான காந்தோங் சேன்முவாங்ஷினுக்கு, நிலநடுக்கம் ஆரம்பமான பிறகு பிரசவ வலி ஏற்பட்டது. பொது மருத்துவமனையின் மருத்துவ ஊழியர்கள் அவரை மாடிப்படி வழியாக கீழே அழைத்துச் சென்ற போது, காந்தோங்கின் பனிக்குடம் உடைந்ததால், படிக்கட்டிலேயே பிரசவம் ஆகிவிடுமோ என்று அவர் பயந்தார்.
"நான் என் குழந்தையிடம், பொறு’ம்மா, இப்ப வெளியே வர வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தேன்" என்று சனிக்கிழமையன்று காந்தோங் கூறினார்.
பிரசவ அறையில் படுக்க வைக்கப்பட்ட தன்னை ஏராளமான மருத்துவர்களும், ஊழியர்களும் சூழ்ந்து கொண்டதாகவும், நிலநடுக்கத்தால் அங்கும் இங்கும் ஆடிக் கொண்டிருந்த படுக்கையில் தனக்கு பெண்குழந்தை பிறந்ததாகவும் கூறிய அவர் அது மிகவும் அதிர்ச்சியளிக்கும் அனுபவமாக இருந்தது என்றும் குறிப்பிட்டார்.
பணியிலிருந்த கணவர் சரியான நேரத்திற்கு அங்கு வரமுடியாத நிலையிலும், மகளை பெற்றெடுத்த போது நிம்மதியடைந்ததாக அவர் கூறினார். காந்தோங்கும், அவரது கணவரும் தங்கள் குழந்தையை "மிங்க்" என்று செல்லமாக அழைக்கின்றனர். அதிகாரப்பூர்வ பெயர் குறித்து அவர்கள் இன்னும் முடிவு செய்யவில்லை, ஆனாலும் பூமிகா, பூகம்பநாயகி நிலநடுக்கப் பிரியா போன்ற காரணப் பெயர்களை சூட்ட அவர்கள் திட்டமிடவில்லை என்பது ஆறுதலான செய்தி!