உலகம் முழுவதும் விலையுயர்ந்த கார்களையும், விமானங்களையும் வாங்க போட்டியிட்டுக் கொண்டிருக்கும் இந்த காலத்தில், லண்டன் நகரில் இரண்டே ஆண்டுகளில் சைக்கிளில் சவாரி செய்வோரின் எண்ணிக்கை 50 %க்கும் அதிகமாகி விட்டதாக அதிகாரப் பூர்வமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
2024, அக்டோபரில் லண்டன் நகரின் வரலாற்று மையமான ஸ்கொயர் மைல் பகுதியில் ஒரு நாளில் 1 லட்சத்து 39ஆயிரம் பேர் சைக்கிளில் பயணம் செய்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதே இடத்தி 2022ல் வெறும் 89 ஆயிரம் பேர் சைக்கிள் சவாரியை மேற்கொண்டிருந்தனர். அதாவது, பகல்பொழுதில் கார்களை விட இரண்டு மடங்கு எண்ணிக்கை யுள்ள சைக்கிள்கள் சவாரிக்கு பயன்படுத்தப் படுவதாக லண்டன் மாநகராட்சி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த திடீர் சைக்கிள் சவாரி மோகத்தால், மோட்டார் வாகன நெரிசல் 2022ல் இருந்ததை விட 2%குறைந்ததுடன், காற்றின் தரம் மேம்பட்டு, நைட்ரஜன் டை ஆக்ஸைடின் வீதம் மிக கணிசமான அளவில் குறைந்தும் உள்ளது.
2003 லிருந்தே வாகன போக்குவரத்தை குறைக்கும் நோக்கில் லண்டனில் நெரிசல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. காற்றை மிகவும் மாசுபடுத்தும் வாகனங்கள் மீது வரி விதிக்கும் ”அல்ட்ரா லோ எமிஷன் ஸோன்” அமைப்பின் மூலம் நகரத்தில் காற்றின் தரம் சமீபத்திய ஆண்டுகளில் மேம்பட்டுள்ளது.
புதிய பாதைகளும், வழித் தடங்களும், சைக்கிள்களை வாடகைக்கு எடுக்கும் திட்டத்தினாலும், சைக்கிள் சவாரி செய்வோர் எண்ணிக்கை 2022ல் இருந்ததை விட நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. இது வரவேற்கத்தக்க ஒரு முன்னேற்றமே. காற்றின் தரம் மேம்படுவதுடன், உடலுக்கு நல்ல பயிற்சியும், விபத்துகள் குறைவதும் இதனால் ஏற்படும் கூடுதல் நன்மைகள். இந்தியாவிலும் இது ட்ரெண்ட் ஆகுமானால், மகிழ்ச்சியான மாற்றமாக அமையும்.