மணமேடையான மருத்துவ மனை மத்தியப் பிரதேசத்தில் அபூர்வத் திருமணம்

thumb_upLike
commentComments
shareShare

மணமேடையான மருத்துவ மனை மத்தியப் பிரதேசத்தில் அபூர்வத் திருமணம்

ந்தர்வ திருமணத்தைப் பற்றி கேட்டிருப்பீர்கள். பதிவுத் திருமண அலுவலகம் பற்றி நமக்குத் தெரியும்; காவல் நிலையத்தில் நடக்கும் திருமணங்களையும் பார்த்திருப்போம். மருத்துவமனையில் நடக்கும் திருமணத்தைப் பற்றி கேட்டிருக்கிறீர்களா?
மத்திய பிரதேசத்தில் அட்சயத் திரியை அன்று மணமுடிக்கக் காத்திருந்த ஆதித்ய சிங்கிற்கும், நந்தினி சோலங்கிக்கும் வாழ்க்கையில் விதி விளையாடி விட்டதாகத் தோன்றியது.
திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன் திடீரென சுகவீனப்பட்ட சோலங்கி அவரது ஊரான கும்ப்ராஜ் கிராமத்திலிருந்த மருத்துவ மனைக்குக் கொண்டு வரப் பட்டார். அங்கு நிலைமை மோசமாகவே பினகஞ்ச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டு பின்னர் அங்கிருந்து பயோரா மருத்துவ மனையில் தீவிர சிகிட்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டார். சிகிட்சைக்குப் பின், சற்றே உடல் நலம் தேறினாலும், ஓய்வெடுப்பது அவசியம் என்று வலியுறுத்திய மருத்துவர்கள், வழக்கமான திருமணச் சடங்குகளில் பங்கு பெறுவது உடல் நலத்தை பாதிக்கும் என்றும் எச்சரித்தனர். இதை விட்டால் அடுத்து இரண்டு வருடங்களுக்கு திருமணம் கூடாது என்று பெரியவர்கள் சொன்னதால், மருத்துவமனையிலேயே திருமணத்தை நடத்த இரு வீட்டாரும் தீர்மானித்தனர்.
மருத்துவமனை நிர்வாகமும் முழு ஒத்துழைப்பு அளித்த நிலையில் வெளிநோயாளிகள் பிரிவு முழுவதும் சுத்தம் செய்யப் பட்டு ஆர்ப்பாட்டமில்லாமல் அலங்கரிக்கப் பட்டது. மருத்துவ பணியாளர்கள் அனைவரும் கூடி இருக்க, ஆதித்ய சிங் தமது குடும்பத்தினருடன் வந்திறங்கினார். நோயாளிகளின் நலம் கருதி மேள தாளம் எதுவுமில்லாமல், அமைதியாக இரவு ஒரு மணியளவில் மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் குடும்பத்தினரின் முன்னிலையில் தொடங்கிய இந்த வைபவத்தில், அக்னிகுண்டத்தை வலம் வரும் வேளையில், நோயுற்ற மணமகளை பூவைப் போல கைகளில் ஏந்திய படி மெல்ல மெல்ல வலம் வந்த மணமகன் எல்லோரையும் கவர்ந்தார். கண்ணீர் மல்க மலர் தூவி அனைவரும் வாழ்த்தினர்.
திருமணத்திற்குப் பின் விரைவாக சோலங்கி உடல்நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது ஒரு அபூர்வ திருமணம் மட்டுமல்ல, மணமக்களின் காதல், மன உறுதியையும், உடன் இருந்தவர்களின் அக்கறையும், ஆதரவையும் காட்டிய அசாதாரண நிகழ்வு என்பதில் சந்தேகமில்லை.

NewsGlitz in Social Media
Share to your pages!
Close