மனைவியிடம் நல்ல பெயர் வாங்கி அவரை அசத்த வேண்டும் என்பதற்காக மும்பை காவல் துறையில் உள்ள பாஸ்போர்ட் டேட்டா சிஸ்டத்தை ஹேக் செய்த கணவர் தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
மும்பையை சேர்ந்த 27 வயதான ஷா என்பவரின் மனைவி வெளிநாட்டில் வேலை தேடிய நிலையில் அவருக்கு வேலை கிடைத்தது. இதனை அடுத்து அவர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் அவரது பாஸ்போர்ட் ஒப்புதல் பெறாமல் இருந்தது.
இந்த நிலையில் மனைவியின் பாஸ்போர்ட்டை ஒப்புதல் பெற வைக்க மும்பை காவல்துறையின் டேட்டா சிஸ்டத்தை ஹேக் செய்து மனைவியின் பாஸ்போர்ட் ஒப்புதல் அளித்துள்ளதாக ஆவணங்களை தயார் செய்தார். தனது மனைவி ஒருவரது பாஸ்போர்ட்டை மட்டும் ஒப்புதல் பெற வைத்தால் சந்தேகம் வரும் என்பதற்காக மேலும் 3 பெண்களின் பாஸ்போர்ட் விண்ணப்பத்தையும் அவர் அங்கீகரித்துள்ளார்.
இந்த குற்றத்தை கண்டுபிடித்த மும்பை காவல் துறையினர் ஐபி முகவரியை வைத்து ஷாவை கைது செய்தனர். அதன் பின்னர் அவர் எப்படி ஹேக் செய்தார் என்பது குறித்த விசாரணையையும் செய்து வருகின்றனர். தற்போது இந்த வழக்கு தென்மண்டல சைபர் க்ரைம் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் ஷாவிடம் சிறப்பு அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மனைவியின் பாஸ்போர்ட்டை உடனடியாக அங்கீகரிக்க ஹேக் செய்து அசத்தலாம் என் எண்ணிய கணவர் இப்பொழுது பரிதாபமாக சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.