நான் வேட்பாளர் ஆனது எனக்கே தெரியாது: கடலூரில் போட்டியிடும் தங்கர்பச்சான் பேட்டி..!

thumb_upLike
commentComments
shareShare

பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் அதில் கடலூர் தொகுதியில் இயக்குனர் தங்கர்பச்சான் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தங்கர்பச்சான் இதற்கு முன் எந்த அரசியல் கட்சியிலும் இல்லாத நிலையில், எந்த அரசியல் கட்சிக்கும் சார்பாக எந்த பொதுக்கூட்டத்திலும் பேசாத நிலையில், திடீரென அவர் வேட்பாளர் ஆகியிருப்பது அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் இதுகுறித்து பேட்டியளித்த போது தங்கர்பச்சான், ‘நான் வேட்பாளராக அறிவிக்கப்படுவேன் என்று எனக்கே தெரியாது, நான் லண்டனில் படப்பிடிப்பு ஒன்றுக்காக சென்று இருந்த போது திடீரென எனக்கு போன் வந்தது, நீங்கள் தான் கடலூர் வேட்பாளர் என்று கேட்டார்கள். இதை அடுத்து நான் சிந்தித்து சொல்கிறேன் என்று ஒரு மணி நேரம் காலம் எடுத்துக் கொண்டு, அதன் பிறகு நான் போட்டியிட ஒப்புக்கொண்டேன். இதனை அடுத்து நான் லண்டனில் இருந்து அவசரமாக திரும்பினேன் என்று தெரிவித்தார்.

மேலும் கடலூர் தொகுதியை பொருத்தவரை தமிழகத்திலே மிகவும் பாதிப்புக்கு உள்ளான தொகுதி என்றும், ஆனால் அது வெளியே தெரியாமல் அரசியல்வாதிகள் மறைத்து விட்டார்கள் என்றும், நாங்கள் சிறு குழந்தையாக இருக்கும் போது சாதாரணமாக ஒரு குச்சியை வைத்துக் குத்தினால், நீரூற்று வெளியே வரும், ஆனால் இப்போது 860 அடி போர் போட்டால் தான் தண்ணீர் வருகிறது, அந்த அளவ்க்கு நிலத்தடி நீரை உறிஞ்சி விட்டார்கள், நிலத்தடி நீரை பாதுகாக்க இதுவரை ஆட்சி செய்த எந்த அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, நான் எம்பி ஆனால் இது குறித்து குரல் கொடுப்பேன் என்றும் தெரிவித்தார்.

மேலும் நான் 37 ஆண்டுகளாக திரையில் இருக்கிறேன், நான் பணத்திற்காக சினிமா எடுக்கவில்லை, மக்களின் வாழ்வியலை தான் சினிமா எடுத்தேன், எனவே எனக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறினார்.

NewsGlitz in Social Media
Share to your pages!
Close