மோசடிக் கும்பலின் டிஜிட்டல் அரெஸ்ட் வயதான தம்பதி தற்கொலை
கர்நாடகாவின் வடகிழக்கு மாவட்டமான பெல்காமில் மோசடி கும்பலின் டிஜிட்டல் அரெஸ்ட் வலையில் சிக்கிய ஒரு வயதான தம்பதியினர் தங்கள் சேமிப்பிலிருந்து ஐம்பது லட்ச ரூபாயை இழந்த மன உழைச்சலில் தற்கொலை செய்து கொண்டனர்.
தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி மக்களின் அறியாமை ஆகியவற்றை பயன்படுத்தி அப்பாவி மக்களை ஏமாற்றும் மோசடிக்கும்பல்கள் நாளுக்கு நாள் பல்கி பெருகி வரும் சூழலில்தான் அதிர்ச்சி தரக்கூடிய இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் பீடி கிராமத்தை சார்ந்த எண்பத்திரெண்டு வயதான டியோக்ஜெரோன் சந்தன் நாசரேத் மகாராஷ்டிர அரசு தலைமை செயலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், எண்பது வயதான தனது மனைவி ஃபிளேவியானாவுடன் தன் சொந்த கிராமத்தில் வசித்து வந்தார். குழந்தைகள் இல்லாத நிலையில் தனிமையில் வசித்து வந்த இந்த தம்பதியினர் நேற்று முந்தினம் இவர்கள் வசித்து வந்த வீட்டிலுள்ள ஒரு அறையில் சடலமாக கிடந்தனர்.
தகவலறிந்து வந்த காவல் துறையினர் இருவரது சடலங்களையும் ஆய்வு செய்த போது சந்தன் நாசரேத் கையிலும் கழுத்திலும் கத்திக்குத்து காயங்களும் ஃபிளேவியாவின் உடல் காயங்களேதுமில்லா நிலையிலும் இருந்தன. காவலர்கள் இருவர் சடலங்களையும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி விட்டு புலன் விசாரணையில் ஈடுபட்டபோது தம்பதியினர் எழுதிய தற்கொலைக் கடிதம் காவலர்கள் கையில் சிக்கியது . இந்த கடிதத்தில் தாங்கள் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிக்கும்பல் ஒன்றால் ஏமாற்றப் பட்டதாக்வும் இதன்மூலம் பல்வேறு தவணைகளில் ஐம்பது லட்ச ரூபாய் வரை இழந்து விட்டதாகவும் அதன் காரணமாகவே இந்த முடிவை எடுப்பதாகவும் அந்த தற்கொலைக் கடிதத்தில் குறிப்பிடப் பட்டிருந்தது. மேலும் அந்த கடிதத்தில் சாந்தன் நாசரேத் , சில நாட்களுக்கு முன்னர் தொலைத்தொடர்பு துறையை சேர்ந்த அதிகாரி என்று ஒருவர் எனது தொலைபேசியில் அழைத்து சில சட்டவிரோத செயல்களுக்கு உங்கள் பெயர் மற்றும் தொலைபேசி எண் ஆகியவை பயன்படுத்தப் பட்டுள்ளதால தங்கள் உங்கள் பெயரில் எப் ஐ ஆர் பதியப்பட்டுள்ளது நீங்கள் டிஜிட்டல் அரெஸ்ட் செய்யப்பட்டுள்ளீர்கள் என்றார்.
அடுத்த சில நாட்களில் சிபிஐ அதிகாரி என்று தன்னை கூறிக்கொண்ட அனில் யாதவ் என்பவர் இந்த வழக்கிலிருந்து விடுபட வேண்டுமானால் ஐம்பது லட்ச ரூபாய் தர வேண்டும் என்றும் தவறினால் தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்றும் மிரட்டினார்.
இதனால் அச்சமடைந்த நான் அவர்கள் கேட்டபடி முதல் கட்டமாக பத்து லட்ச ரூபாயும் , வீடு நகைகள் போன்றவற்றை அடமானம் வைத்து மீதி நாற்பது லட்சமும் அனுப்பினேன் ஆனாலும் அனில் யாதவ் என்னை தொடர்ந்து மிரட்டினார் . பின்னர் நான் ஏமாற்றப் பட்தை உணர்ந்தேன் , இது எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது இனியும் வாழ விருப்பமில்லாத்தால் இந்த முடிவை எடுத்துள்ளோம் எங்களது சடலங்களை மருத்துவ ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளுங்கள் என்று அந்த கடித்தில் எழுதப்பட்டுள்ளது.
தற்போது காவல்துறையினர் சாந்தனின் அலை பேசிக்கு வந்த அழைப்புகளை வைத்து குற்றவாளிகளைப் பற்றிய விபரங்களைத் தேடி வருகின்றனர்.
மோசடிக் கும்பலின் டிஜிட்டல் அரெஸ்ட் வயதான தம்பதி தற்கொலை
schedulePublished Mar 30th 25