சென்ற வார இறுதியில் மியான்மரை உலுக்கிய நிலநடுக்கம் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அங்கு நடந்து வரும் உள்நாட்டுப் போர், மீட்பு நடவடிக்கைகளை மேலும் சிக்கலாக்கியுள்ளது. "பொதுவாகவே இது மீட்புப் பணிகளை மேற்கொள்ள மிக சவாலான சூழ்நிலை. இப்போது அது, கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகவே ஆக்கிவிட்டது." என்று புவியியலாளர் ஃபீனிக்ஸ் கூறியுள்ளார். 1948 இல் சுதந்திரம் பெற்றதிலிருந்தே, மியான்மர் உள்நாட்டு மோதலில் சிக்கியுள்ளது. பல்வேறு இனக்குழுக்கள் சுயாட்சியை நாடுகின்றன. 2021, பிப்ரவரி 1 அன்று நடந்த இராணுவ சதித் திட்டத்திற்குப் பிறகு நிலைமை தீவிரமடைந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் வெளியேற்றப் பட்டதுமல்லாமல், 2,600 க்கும் மேற்பட்ட கிளர்ச்சிக் குழுக்கள் பரவலான ஆயுதமேந்திய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் நிலைமை உருவாகியுள்ளது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப் பட்ட பெரும்பாலான பகுதிகளில் மீட்புப் பணி மிக குறைவாகவே நடைபெறுகிறது. உள்ளூர் தன்னார்வலர்கள் தாம் முழுமூச்சாக மீட்புப் பணியில் இறங்கி யுள்ளனர். மருத்துவமனைகள் நிரம்பி வழிவதோடு, முதலுதவிப் பெட்டிகள், இரத்தப் பைகள், மயக்க மருந்துகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் உள்ளிட்ட மருத்துவப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன.
மாண்டலே விமான நிலையம் சேதமடைந்துள்ளது, மேலும் நய்பிடாவின் விமான நிலைய கட்டுப்பாட்டு கோபுரம் இடிந்து விழுந்து, வணிக விமான சேவை நிறுத்தப் பட்டுள்ளது. ஆனால், தற்போது, உலகளாவிய விதத்தில் சர்வதேச உதவி வரத் தொடங்கியுள்ளது.
மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பல நாடுகள் உதவிக் கரம் நீட்டியுள்ளன. கள மருத்துவமனை மற்றும் அவசர மருத்துவ பணியாளர்களை ஏற்றிச் செல்லும் இரண்டு சி-17 இராணுவ போக்குவரத்து விமானங்களை இந்தியா அனுப்பியது. சீனா 135 க்கும் மேற்பட்ட மீட்பு பணியாளர்களை அனுப்பியதோடு, அவசர நிவாரணத்திற்காக, 13.8 மில்லியன் டாலர் அனுப்புவதாக உறுதியளித்துள்ளது. ரஷ்யா 120 மீட்புப் படையினரையும் மருத்துவ குழுக்களையும் அனுப்பியுள்ளது. மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான ஐ. நா அலுவலகம், மியான்மரில் சுகாதார வசதிகள் பரவலாக அழிக்கப்பட்டிருப்பதால், மிகவும் நெருக்கடியான சூழல் நிலவுவதாக தெரிவித்துள்ளது.
மியான்மரின் ஜனநாயக சார்பு படைகளுக்கு விசுவாசமாக இருக்கும் எதிர்க்கட்சியான தேசிய ஒருமை அரசு, மீட்பு முயற்சிகளுக்கு உதவுவதற்காக ஒரு பகுதியில் போர்நிறுத்தத்தை அறிவித்தது. இருப்பினும், மியான்மரின் இராணுவ ஆட்சியின் நடவடிக்கைகளில் எந்த மாற்றமுமில்லை. நாடே பேரழிவில், சீரழிந்திருந்தாலும், வான்வழித் தாக்குதல்கள் நிறுத்தப் படவில்லை.