பூகம்பத்தால் உருக்குலைந்து போயிருக்கும் மியான்மரில் இராணுவ ஆட்சி நடப்பதால் நிவாரணப் பணிகளில் பங்கெடுக்க வளர்ந்த நாடுகளும் மேற்கு நாடுகளும் முன்வராத நிலையில், இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருப்பவர்களை தன்னார்வலர்களும் பொது மக்களும் தகுந்த உபகரணஙக்ள் இன்றி வெறுங்கையால் இடிபாடுகளைத் தோண்டி வரும் பரிதாப சூழலுக்கு ஆளாகியுள்ளனர்.
மியான்மரில் நில நடுக்கம் ஏற்பட்டு மூன்று நாட்கள் ஆன பின்னரும் இன்னமும் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. பல இடங்களில் மின் இணைப்புகள் இன்னமும் சீர் செய்யப்படவில்லை. மருத்துவமனைகள் படுக்கைகள் நிரம்பி வழிய மருத்துவ மனைகளுக்கு வெளியேயும் சிகிர்ச்சை பெறும் பலர் படுக்க வைக்கப்பட்டிருப்பதை காண முடிகிறது.
இந்த நில அதிர்வு மற்றும் அதைத் தொடர்ந்த கட்டிட சரிவுகள் இடி பாடுகளில் சிக்கி இதுவரை சுமார் ஆயிரத்து அறுநூறு பேர் இறந்திருக்கலாம் என சொல்லப் பட்டாலும் இறப்பு எண்ணிக்கை பத்தாயிரத்துக்கும் அதிகமாக இருக்கலாம் என அமெரிக்க புவியியல் மையம் கருத்து தெரிவித்துள்ளது.
இலங்கை இந்தோனேஷியா போன்ற தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இயற்கைப் பேரழிவுகள் வந்தபோது ஓடோடி வந்த மேற்குலக நாடுகள் மியான்மர் நில நடுக்க நெருக்கடிகளை கண்டும் காணாமல் ஒதுங்கிப் போகும் மனப்பான்மையுடன் நடந்து கொள்வதை காண முடிகிறது.
இந்தியா சீனா போன்ற நாடுகள் மியான்மருக்கு உதவிக்கரம் நீட்டியுள்ள நிலையில் ,அமெரிக்க அதிபர் டிரம்ப் மியான்மருக்கு அமெரிக்கா உதவும் என்று அறிவித்தாலும் அதற்கான எந்த நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப் பட்தாக தெரியவில்லை.
உள் நாட்டு அரசியல் நெருக்கடி பொருளாதார சிக்கல் என்று பலவிதமான பிரச்சனைகளை எதிர் கொண்டுவரும் மியான்மர் மக்களுக்கு இந்த கால கட்டம் மிகவும் சாவலான ஒரு கால கட்டமாகவே இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.
வெறுங்கையுடன் மீட்புப்பணிகள் - மியான்மரில் தொடரும் அவலம்
schedulePublished Mar 30th 25