ஸ்ரீலீலா நடித்து வரும் தெலுங்கு திரைப்படத்தில், பிரபல கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், சன்ரைசர்ஸ் ஐதராபாத் என்ற ஐபிஎல் அணியில் விளையாடிய போது தெலுங்கு மக்கள் மத்தியில் பிரபலமானவர். குறிப்பாக, பல தெலுங்கு பாடல்களுக்கு நடனமாடி, அவற்றின் ரீல்ஸ் வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோக்கள் வைரல் ஆனது என்பது அனைவரும் அறிந்ததே. புஷ்பா படம் ரிலீசான போது, ‘ஸ்ரீ வள்ளி’ பாடலுக்கு அவர் நடனமாடிய வீடியோ இணையதளங்களில் பெரும் கவனம் பெற்றது.
இந்த நிலையில், நித்தின் மற்றும் ஸ்ரீலீலா நடிக்கும் தெலுங்கு திரைப்படமான ‘ராபின் ஹூட்’ படத்தின் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் ரவிசங்கர், இந்த படத்தில் டேவிட் வார்னர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்ற தகவலை வெளியிட்டார்.
வரும் 28ஆம் தேதி, இந்த படம் திரையரங்குகளில் வெளியாவதாக இருக்கிறது. ரசிகர்கள், டேவிட் வார்னரை பெரிய திரையில் பார்க்க மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.