வாழ்க்கை ஒரு வட்டம்.. சிஎஸ்கே திரும்பியது குறித்து கிரிக்கெட் வீரர் அஸ்வின்..!

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பி உள்ள அஸ்வின், தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், 'வாழ்க்கை ஒரு வட்டம்’ என்று விஜய் பட வசனத்தை கூறி உள்ளார்.

2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள நிலையில், நேற்று போட்டியாளர்களை தேர்வு செய்யும் ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் ஏலம் போன நிலையில், தமிழக வீரர் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9,75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

இது குறித்து அஸ்வின் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறிய போது, “வாழ்க்கை ஒரு வட்டம் என்று சொல்வார்கள். 2008 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரை நான் மஞ்சள் ஜெர்ஸி அணிந்து சிஎஸ்கே அணிக்காக விளையாடினேன். அதை நான் இப்போது தெரிவிப்பதில் கடமைப்பட்டிருக்கிறேன். சிஎஸ்கே டீமில் விளையாடும் போது நான் கற்றுக் கொண்டது தான் என்னுடைய சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது.”

“சிஎஸ்கே அணிக்காக நான் ஆடி கிட்டத்தட்ட 10 வருஷமாக போகுது. 2015 தான் என்னுடைய கடைசி சீசனாக இருந்தது. சிஎஸ்கே என்னை எடுத்திருக்கிறார்கள், அதிக விலைக்கு எடுத்திருக்கிறார்கள். மீண்டும் திரும்பி வருகிறேன் என்பதை விட, எனக்கு மிகவும் மறக்க முடியாத ஒரு சம்பவம் என்றால் 2011 ஆம் ஆண்டு என்னை எடுப்பதற்காக ஏலத்தில் எப்படி சண்டை போட்டார்கள்.”

“அதேபோன்று இந்த முறையும் என்னை எடுத்திருக்கிறார்கள். இது ஒரு சிறப்பான உணர்வு, மிகவும் மறக்க முடியாத ரசிகர்கள் சிஎஸ்கே ரசிகர்கள் தான். அதை நான் பலமுறை பார்த்திருக்கேன். நான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் போது, சிஎஸ்கே அணிக்கு எதிர்த்து விளையாடும் போது மிகவும் கஷ்டமாக இருக்கும். நான் பந்து வீசும் போது, பேட்டிங் செய்யும் போது, ரசிகர்கள் கத்த மாட்டார்கள்.”

“இப்போது மீண்டும் அந்த ரசிகர்கள் முன் விளையாடி எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மீண்டும் அணிக்கு திரும்புவதில் மகிழ்ச்சி. தோனி அவர்களுடன் விளையாடுவதிலும் எனக்கு மிக்க மகிழ்ச்சி” என்று கூறினார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Trending Articles